×

குடியாத்தத்தில் திமுக சிறப்பு கிராமசபா கூட்டம் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர், டிச.24: மத்திய அரசு பொதுமக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியில் முறைகேடு நடந்துள்ளது என திமுக சார்பில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் துரைமுருகன் பரபரப்பு குற்றம் சாட்டினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடக்கிறது. அதன்படி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான துரைமுருகன் தொடங்கிவைத்தார்.

இதில் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ, எம்பி கதிர்ஆனந்த், முன்னாள் அமைச்சர் விஜய், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், துரைமுருகன் பேசியதாவது: குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு தற்போது எம்எல்ஏ இல்லாததால் மக்களின் பிரச்னைகளை எம்பி கதிர்ஆனந்த் முன்னின்று தீர்த்து வைப்பார். அதிமுக ஊழல் பட்டியல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதுதவிர விஜிலென்ஸிலும் புகார் செய்துள்ளோம்.

கவர்னரை சந்தித்து அதிமுகவினரின் ஊழல் பட்டியலை வழங்கியிருக்கிறோம். குறிப்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசு வழங்கிய ரேஷன் அரிசியை, முறைகேடு செய்துள்ளனர். ஆட்சியில் இருந்து திமுக வெளியேறியேபோது ₹1 லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. ஆனால் தற்போது ₹7 லட்சம் கோடி கடன் உள்ளது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட டிவி உள்ளிட்ட இலவச பொருட்கள் இன்றும் நல்ல நிலையில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் வழங்கிய மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை எப்போதோ காயலான் கடைக்கு போய்விட்டது.

கடந்த 4 ஆண்டுகள் வரை பொங்கல் பரிசாக ₹2,500 வழங்கவில்லை, கொரோனா காலத்திலும் ₹1000 மட்டுமே வழங்கியிருந்தனர். ஆனால் தற்போது தேர்தலை கருத்தில்கொண்டு ₹2500 தருவதாக கூறியுள்ளனர். இவ்வாறு பேசினார்.
பின்னர் அனைவரும் ‘அதிமுகவை விரட்டியடிப்போம்’ என்ற உறுதிமொழி ஏற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் கிராம மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். கேப்சன் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். உடன், எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏ நந்தகுமார், முன்னாள் அமைச்சர் விஜய், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன்.

Tags : DMK ,gram sabha meeting ,Duraimurugan ,Gudiyatham ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...