×

லடாக் மக்களின் துயரமும் வேதனையும் பிரதமர் மோடியின் மனசாட்சியை எழுப்ப வேண்டும் : ராகுல் காந்தி கருத்து

டெல்லி : லடாக் மக்களின் துயரமும் வேதனையும் பிரதமர் மோடியின் மனசாட்சியை எழுப்ப வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “6 ஆண்டுகளுக்கு முன், லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டபோது லடாக் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். ஆனால், மிகப்பெரிய ஏமாற்றம் லடாக் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. லடாக் மக்களின் நிலம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் துணை ஆளுநர் மற்றும் அதிகாரத்துவத்தால் கையகப்படுத்தப் பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கான நியாயமான கோரிக்கைகள்  நிறைவேற்றப்படவில்லை. சீனா ஒருதலைப்பட்சமாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள நிலையை ரத்து செய்ததாலும் ஜூன் 19, 2020 அன்று சீனாவிற்கு, பிரதமர் நற்பெயரை வழங்கியதாலும் லடாக்கில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. லடாக் இந்தியாவிற்கு கலாச்சார, பொருளாதார, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. லடாக் மக்கள் எல்லா நேரங்களிலும், தங்கள் மையத்தில் பெருமைமிக்க இந்தியர்களாக இருந்துள்ளனர். லடாக் மக்களின் துயரமும் வேதனையும் ஒன்றிய அரசின் மனசாட்சியை எழுப்ப வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் மிக விரைவில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ladakh ,Modi ,Rahul Gandhi ,Delhi ,Leader of Opposition ,Lok Sabha ,Union Territory of ,Ladakh… ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...