×

வர்த்தக மையத்தில் 2 நாள் நடைபெறுகிறது ‘வேளாண் வணிகத் திருவிழா’ 27ம் தேதி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 27, 28ம் தேதிகளில் நடைபெறும் ‘வேளாண் வணிகத் திருவிழா’வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டிலும் நடத்தப்பட்ட வேளாண் கண்காட்சி போன்றே இந்த ஆண்டின் முதல் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் 11.6.2025 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் தொடங்கி வைத்தார். 2 நாள் நடைபெற்ற இந்த விழா பொதுமக்களின் மிகுந்த வரவேற்பை பெற்று மிகச்சிறப்பாக நடந்தது.

அந்த வகையில், இந்த ஆண்டின் 2வது நிகழ்வாக’ வேளாண் வணிகத் திருவிழா-2025’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி இதனை தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்றுகிறார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைபிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இது நடைபெறும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்சார் நிறுவனங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளில் தங்களது மதிப்புக்கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மூலிகை உணவுப் பொருட்கள், பழங்கள், பசுமைக் காய்கறிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், காய்கறி விதைகள், உயர் ரக பழ மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விற்பனையும் மேற்கொள்வார்கள்.

மேலும், வேளாண் விளைபொருட்கள் விற்பனை, சந்தை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புக்கூட்டும், பதப்படுத்தும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் வணிகர்கள் சந்திப்பும் நடைபெறும். வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு அருகாமையில் உள்ள 14 மாவட்டங்களில் இருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Agricultural Trade Festival ,Trade Centre ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Chennai Trade Centre ,Welfare Minister ,M.R.K. Panneerselvam ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்