காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர், டிச.24: அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சங்கீதா விளக்க உரை ஆற்றினார், மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட பொருளாளர் காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் 37 வருடங்களாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவுக்கென்று தனித்துறை ஏற்படுத்த வேண்டும், ஒட்டுமொத்த ஓய்வூதியம் அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் உணவூட்டு செலவினம் ஒரு மாணவருக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர், முடிவில் மாவட்ட பொருளாளர் மாலா நன்றி கூறினர்.

Related Stories:

>