×

தொழிலாளர் நல சட்டத்தை மதிக்காத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை

நாகை,டிச.24: தொழிலாளர் நல சட்டங்களை மதிக்காத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை அருகே திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொது செயலாளர் கண்ணன் ஆகியோர் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இதில் தெரிவித்திருப்பதாவது: நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும். தொடர் பணி அளிக்க இயலாத பட்சத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், அதன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கியதை போன்று தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகமும் இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம்.

ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் ஆலை வளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்பது. வரும் 5ம் தேதி சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை குடும்பத்தினருடன் பேரணியாக சென்று வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைப்பது. 6ம் தேதி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் ஆலை நுழைவு வாயில் முன் அடையாள உண்ணாவிரதம் இருப்பது. 7ம் தேதி ஆலை நுழைவு வாயில் முன், ஆலையை சுற்றி உள்ள கிராம மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது.

8ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பதிவு அலுவலகம் எதிரே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் இணைந்து தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானித்துள்ளோம். மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களையும், அரசின் தொழிற்சாலை சட்டங்களையும் மதிக்காத அந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு முதல் இதுநாள் வரை போராடி வரும் எங்களை மத்திய, மாநில அரசுகள் கருணை கொலை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : oil refinery ,
× RELATED தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில்...