சேலம், டிச.24: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் நாளை (25ம் தேதி) வைகுண்ட ஏகாதசி உற்சவம் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி அரசு வழிகாட்டி நெறிமுறைகளின் படியும், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளின் படியும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அனைத்து பக்தர்களும் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்யவேண்டும். கோயிலில் தரிசனம் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை tnhrce.gov.in இணையதள முகவரியில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சொர்க்கவாசலை யொட்டி அழகிரிநாதர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை அறிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்காக வெப்ப நிலை கண்டறியும் கருவி, கிருமிநாசினி மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியதாவது: கோட்டை அழகிரிநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை யொட்டி, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது தேவைக்கேற்றாற் போல் இலவச தரிசனம் அல்லது கட்டண விரைவு தரிசனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தரிசனத்திற்கு வரும்போது ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட் மற்றும் ஆதார் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.