முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

சேலம், டிச.24: தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக, பள்ளி திறப்பு தாமதமாகி வருகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை, பாடபுத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதுடன், வீடியோ பாடம் மூலம் கற்பித்தல் பணிகள் நடந்து வருகின்றன. அதேசமயம், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க ஏஎக்ஸ்என் இன்போடெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை மண்டம் மற்றும் மாவட்ட வாரியாக சுழற்சி அடிப்படையில், இப்பயிற்சி வகுப்பு நடக்கும். கம்யூட்டரிசைடு அக்கவுண்டிங் சிஸ்டம் டேலி என்ற தலைப்பில், ஆன்லைன் மூலமாக பயிற்சி நடக்கிறது.

இப்பயிற்சியில் தற்போது நடைமுறையில் உள்ள கணினி மூலமாக கணக்கு பதிவேடுகளை பராமரிப்பது மற்றும் வணிக கணக்குகளை கணினியில் உள்ளீடு செய்வது தொடர்பான சாப்ட்வேர் குறித்து, முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். இதுகுறித்து முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து, பதிவு செய்யவைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி நாள், நேரம் மற்றும் இணையவழி தொடர்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>