×

நடைபாதைகளில் குப்பை அகற்றும் பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

சேலம், டிச.24: சேலம் மாநகரில், நடைபாதையில் குப்பையை அகற்றும் பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் மாநகராட்சியில், நடைபயிற்சியின் போது நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி, குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன், சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், சூரமங்கலம் மண்டலத்தில் அபிராமி கார்டன், பள்ளப்பட்டி ஏரி கரை, அங்கம்மாள் காலனி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் ஏற்காடு மெயின் ரோடு, கன்னங்குறிச்சி மெயின் ரோடு, செரி ரோடு, சாரதா காலேஜ் மெயின் ரோடு, அம்மாபேட்டை மண்டலத்தில் டி.வி.கே.மெயின் ரோடு, காமராஜர் நகர் காலனி, மன்னார்பாளையம் பிரிவு ரோடு, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் திடீர் நகர், எஸ்.கே. கார்டன், லைன் ரோடு ஆகிய 13 இடங்களில்  குப்பையை அகற்றும் பணி நடந்தது. இப்பணியில்,  600 தன்னார்வலர்கள் ஈடுபட்டு 1200 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்தனர்.  கொண்டலாம்பட்டி மண்டலம் திடீர் நகரில், குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘குப்பையை அகற்றும் பணியில் இளைஞர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகாதாரமான, தூய்மையான பகுதியாக திகழச்செய்ய வேண்டும்,’ என்றார்.

Tags : corporation commissioner ,
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...