×

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தேர்வு

கோவை, டிச.24: ஜனவரி 26ம் தேதி டெல்லியில், குடியரசுத்தலைவர் முன்னிலையில் நடக்கவிருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கோவை  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடர்ந்து 6வது முறையாக பங்கேற்க உள்ளது.  கோவை  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்களான பிரவீன் குமார், அரவிந்த் மற்றும் பவித்ரா ஆகியோர் இதற்காக தேர்வாகியுள்ளனர். கடந்த நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முதல் கட்ட பயிற்சியில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பாக  பிரவீன் குமார் மற்றும் பவித்ரா ஆகியோர்  பத்து நாட்கள் பயிற்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து, நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை மதுரையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழ்நாடு என்.சி.சி. அணியின் சார்பாக அரவிந்தன் கலந்துகொண்டார். மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்ற முதல் கட்ட பயிற்சியில் பிரவீன் குமார் மற்றும் அரவிந்த் தங்கள் தனித் திறனை வெளிப்படுத்தி புதுடெல்லியில் நடக்கவிருக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். மேலும், மாணவி பவித்ரா தமிழக அளவில் சென்னையில் ஆளுநர் முன்னிலையில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ். சார்பில் பங்கேற்க உள்ளார். மாணவர்களுக்கு, எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் சிவக்குமார், அலுவலர் பிரகதீஸ்வரன் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபாஷினி, நாகராஜன் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் விவேக் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags : Ramakrishna College ,Delhi ,parade ,Republic Day ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு