×

தாளவாடி மலைப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் வனத்துறையினர் கண்காணிப்பு

சத்தியமங்கலம், டிச. 24:   தாளவாடி மலைப்பகுதியில் கல்குவாரியில் நடமாடும் சிறுத்தையை  பிடிக்க 3 கூண்டுகள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூசையபுரம், தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, பீம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகள் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியைவிட்டு வெளியேறும் சிறுத்தைகள் மலை கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றுவிட்டு, பகல் நேரங்களில் செயல்படாத கல் குவாரிகளில் உள்ள புதர் மறைவில் சென்று பதுங்கிக் கொள்கின்றன.  இப்பகுதியில் முகாமிட்டிருக்கும் சிறுத்தைகள் தினமும் மலை கிராமங்களில் புகுந்து கால்நடைகளை அச்சுறுத்தி வருவதால், விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததைத்தொடர்ந்து தாளவாடி மற்றும் ஜீரகள்ளி வனத்துறையினர் மலை கிராமங்களில் செயல்படாத கல் குவாரிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் 3 இடங்களில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டுகளை வைத்து தானியங்கி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் செயல்படாத கல்குவாரி பகுதிகளில் உள்ள புதர்களை அகற்றி, சுற்றிலும் கம்பி வேலி அமைக்குமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து ஈரோடு கலெக்டர் கதிரவன் செயல்படாத கல் குவாரி உரிமையாளர்களுக்கு புதர்களை சுத்தப்படுத்தவும், சுற்றிலும் கம்பி வேலி அமைக்கவும் அறிவுறுத்துமாறு ஈரோடு கனிமவளத்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Forest officials ,hills ,Talawadi ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...