×

சிசிடிவி கேமராக்கள் பொருத்தாவிட்டால் நகை, அடகு கடைகளின் உரிமம் ரத்து

கும்பகோணம், டிச. 24: சிசிவிடி கேமராக்கள் பொருத்தாவிட்டால் நகை, அடகு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து நகை கடைகள் மற்றும் அடகுக்கடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நகை கடைகளில் சிசிடிவி கேமரா கடை உள்புறம் தெரிவது போன்று மட்டுமே பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் வெளிபுறமும் தெரியும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். சிசிடிவி கேமரா பதிவுகள் அதிகரிக்கும்போது அதன் பதிவை உடனுக்குடன் பென்டிரைவ் மூலம் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். அடகு கடைக்கு வருபவர்களிடம் அடையாள அட்டை நகல் பெற்று கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கடையில் பணம் பெட்டகம் மற்றும் லாக்கர்களில் கைரேகை பதிவில் திறக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். கடைகளின் பின்பக்க கதவுகளை கூடுதல் பாதுகாப்புடன் அமைக்க வேண்டும். வெளிமாநில நபர்கள் நடமாட்டம் இருப்பின் அதை கண்காணித்து காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். கடையை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது இந்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு அரசாணையின்படி சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் சிசிடிவி கேமரா வைக்க தவறினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கூட்டத்தில் மேற்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட நகை கடைகள் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Tags : pawn ,shops ,
× RELATED பெண் பயணியிடம் 3 பவுன் ‘அபேஸ்’ ஓடும் பஸ்சில் துணிகரம்