×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

 

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும் சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. சத்தியநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று வழக்கை முடித்து வைத்து 2024 செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த இரு வழக்குகளிலும் புலன் விசாரணை முடிந்து விட்டது.

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர விரைந்து அனுமதி பெற்று. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.

Tags : AIADMK MLA ,T. Nagar Sathya ,Anti ,Corruption Department ,Court ,Chennai ,Thyagaraya Nagar ,Sathyanarayanan… ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்