×

சமூகநீதி விடுதிகளில் மதமாற்ற புகார் மாணவர் விடுதிகளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாக பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்கு பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் பெற்றோரே இதுகுறித்த புகார் கடிதத்தை தமிழக முதல்வர் உள்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார். அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது. சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் பிற அரசு மாணவர் விடுதிகளையும் தனது நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu ,BJP ,Lakshmi ,Adi Dravidar Social Justice Hostel ,Kalaiyarkoil, Sivaganga district ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி