விடுபட்ட கர்ப்பிணிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் ஊட்டச்சத்து பெட்டகம்

கோவை, டிச. 23: கோவையில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க கூடுதலாக 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வந்துள்ளதாக நிலையில், விடுபட்ட கர்ப்பிணிகளுக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் சத்தான உணவு கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

அதன்படி, கர்ப்பிணிகளுக்கு மூன்றாம் மாத முடிவிலும், 4-ம் மாதம் முடிவிலும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும். இதில், தலா ரூ.2 ஆயிரம் மதிப்பு உள்ள தாய் ஊட்டச்சத்து மாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம் பழம், குடல் புழு மாத்திரை, டீ கப், பருத்தி துண்டு, நெய், பிளாஸ்டிக் கூடை ஆகியவை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக அளிப்பது இல்லை என கர்ப்பிணி தாய்மார்கள் குற்றம்சாட்டினர். இரண்டு முறை வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து பெட்டகம், ஒரு முறை மட்டுமே அளிப்பதாகவும், அதுவும் அனைவருக்கும் வழங்குவதில்லை எனவும் கர்ப்பிணிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,  கோவை மாவட்டத்துக்கு தற்போது கூடுதலாக 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வந்துள்ளதாகவும், இதனை விடுபட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்  ரமேஷ்குமார் கூறியதாவது: கோவையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பிரசவங்கள் நடக்கிறது. இதில் 60 சதவீதம்  பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். அரசு மருத்துவனைகளில் சிகிச்சை எடுத்துகொள்ளும் நபர்களுக்குதான் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் நிதியுதவி, ஊட்டச்சத்து பெட்டகங்கள் அளிக்கப்படுகிறது. அதன்படி, நடப்பு நவம்பர் வரையில் 16 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பலருக்கும் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அடுத்தகட்டமாக தற்போது 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து கர்ப்பிணிகளுக்கும் 2 முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். மேலும், விடுபட்ட கர்ப்பிணிகள் அனைவருக்கும் மார்ச் இறுதிக்குள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>