×

சத்தியமங்கலம் அருகே 40 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு தீர்வு

சத்தியமங்கலம், டிச. 23:  சத்தியமங்கலம் அருகே பளிஞ்சூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார்  பட்டா நிலத்தில் உள்ள சாலையை தானமாக வழங்க விவசாயிகள் ஒப்புகொண்டதால்,  40 ஆண்டு  கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பளிஞ்சூர் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தனியார் பட்டா நிலத்திற்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதால், இக்கிராமத்திற்கு தார் சாலை மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தர முடியாத நிலை ஏற்பட்டது. பளிஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து சாலை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மனு அளித்ததோடு, பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இச்சாலை பிரச்னைக்கு தீர்வு காண கோரி, சாலையில் குச்சிகளை வெட்டி போட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி அதிகாரிகள் பளிஞ்சூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள நில உரிமைதாரர்களான விவசாயிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பளிஞ்சூர் கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு நிலத்தை தானமாக வழங்குமாறு கேட்டதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் சாலைக்கு நிலத்தை தானமாக வழங்க ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்ற சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் தனியார் விவசாய நிலத்தில் உள்ள சாலை அளவீடு செய்யப்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில் முறையாக கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு இந்த சாலை தானமாக ஒப்படைக்கப்பட உள்ளதாக அப்பகுதி விவசாயிகளும், அதிகாரிகளும் தெரிவித்தனர். 40 ஆண்டு காலமாக இருந்த சாலை பிரச்னைக்கு, தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளதால், பளிஞ்சூர் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Satyamangalam ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...