விழுப்புரம், டிச. 22: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் பிரமுகர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டதுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இந்நிலையில், திடீரென்று மனைவி, மகளுடன் வந்த நபர் தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை குடும்பத்தினர் மீதும், தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று கேனை பறித்து அவர்களை காப்பாற்றினர். விசாரணையில், விழுப்புரம் அருகே கடையத்தைச் சேர்ந்த பாபு(46), முன்னாள் காங்கிரஸ் வட்டாரத்தலைவர், அவரது மனைவி ஆனந்தி(35), அவரது மகள் தேனீ(18) என்பது தெரியவந்தது.