×

பாபநாசம், குற்றாலம் கோயில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

வி.கே.புரம், டிச. 22: பாபநாசம், குற்றாலம் கோயில்களில் மார்கழி திருவாதிரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பாபநாசத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் 10 நாட்கள் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை பட்டர்கள் சங்கர சுப்பிரமணியன்,  ஹரஹர சுப்பிரமணியன், சோமசுந்தரம் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் கோயில் மணியம் செந்தில்குமார், உதவியாளர் பேச்சியப்பன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் 7வது மற்றும் 8வது திருவிழா நாட்களில் நடராஜர் எழுந்தருளுல் நிகழ்ச்சி, கோவில் உட்பிரகாரத்தில் நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனம், 30ம் தேதி அதிகாலை 4 மணியளவில் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜெகநாதன் செய்துள்ளார்.

இதேபோல் குற்றாலத்தில் உள்ள குற்றால நாதர் சுவாமி கோயிலிலும், நேற்று காலை திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டர்கள் மகேஷ், கணேசன், பிச்சுமணி என்ற கண்ணன், ஜெயமணி சுந்தரம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், இலஞ்சி அன்னையாபாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் காவையா, செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் தர், இணை செயலாளர் பண்டாரசிவன், சர்வோதயா கண்ணன், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.  இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கோயில் உள்பிரகாரத்தில் தினமும் சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. மேலும் விழா நாட்களில் காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.  24ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 28ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 30ம் தேதி குற்றாலம் வர்த்தக சங்கம் கட்டளை சார்பில் சித்திரசபை மற்றும் கோயில் வளாகத்தில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Thiruvathirai ,temples ,Papanasam ,Courtallam ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு