×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் மின்வாரிய கேங்மேன் பணி ஆணை வழங்கக்கோரி மனுக்களுடன் திரண்ட இளைஞர்கள் ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார்

திருவண்ணாமலை, டிச.22: மின்வாரிய கேங்மேன் பணி ஆணை வழங்கக்கோரி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் மனுக்களுடன் திரண்டு, ஊர்வலமாக செல்ல முயன்ற இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு கடந்த 2019ம் ஆண்டு உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடந்தது. ஆனால், தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்ச்சி பெற்று, வேலைக்காக காத்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று, கேங்மேன் பணி நியமன வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிபதியிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக மனுவை நீதிபதியிடம் நேரடியாக வழங்குவது மரபு கிடையாது. எனவே, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும்படி தெரிவித்தனர். மேலும் ஊர்வலமாக செல்லவும் தடை விதித்தனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று, இளைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Shiva ,Thiruvannamalai ,procession ,men ,kenmen ,Electricity Board ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...