×

சூளைமேனி கிராமத்தில் சமுதாய கூடத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையம்: கட்டிடம் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: சூலைமேனி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வரும் நிலையில், புதிய கட்டிடம் கட்ட வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். பொதுமக்கள் பயன்பெறும் விதமாக சூளைமேனி பகுதியில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு சமுதாய கூடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில், சமுதாய கூடத்தில் தற்போது அரசின் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதிகளான பாலவாக்கம், லச்சிவாக்கம், கீழ்கரமனூர் கண்டிகை, தண்டலம், ஆத்துப்பாக்கம் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சூளைமேனி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து, தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்கின்றனர். இதனால், பொதுமக்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த மீண்டும் திருமண மண்டபங்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சூளைமேனி கிராமத்தில் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Tags : Paddy procurement ,Sulaimani ,Pothukkottai ,Elpravaram Union Sulaimani Uradachi ,Othukottai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!