×

வேலூர் மாவட்டத்தில் சர்வர் பழுதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

வேலூர், டிச.22: ரேஷன் கடைகளில் உள்ள சர்வர் பழுது காரணமாக பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தமிழகத்தில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிஓஎஸ் இயந்திரம் பொதுமக்களின் கைரேகையுடன் கூடிய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பயோமெட்ரிக் இயந்திரம் அடிக்கடி சர்வர் பழுது காரணமாக இயங்காமல் உள்ளதால் பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பழைய நடைமுறையிலேயே பொருட்களை வாங்கிச்செல்ல தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. பின்னர் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் ைகரேகை முறையை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை கடந்த 7ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று சத்துவாச்சாரி, தொரப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் நேற்று காலை திடீரென மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயோமெட்ரிக் கருவியை இணைக்கும் சர்வர் பழுதானது. இதனால் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து 1 மணி நேர பழுதுக்கு பிறகு சர்வர் செயல்பட தொடங்கியது. பின்னர் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags : Vellore district ,ration shops ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...