×

கம்பளி உற்பத்தி கருத்தரங்கம்

திருப்பூர், டிச.22: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், அடல் இன்கு பேஷன் மையம் மற்றும் ‘வுல்மார்க்’ சார்பில், கம்பளி பின்னலாடை உற்பத்தி குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி வரவேற்றார். இதில் ‘வுல்மார்க்’ நிறுவன இந்திய பிரிவு தொழில்நுட்ப வல்லுனர் ஜோதி ரஞ்சன் பேசியதாவது: கம்பளி இழை இயற்கையில் மக்கும் தன்மை, நுண்ணுயிர் தடுப்பு, மென்மை தன்மை கொண்டுள்ளது. கம்பளியுடன், வெவ்வேறு வகை இழைகளை கலந்து உயர் ரக ஆயத்த ஆடை ரகங்கள் தயாரிக்க முடியும். திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கோடை கால ஆடைகளையே அதிகம் தயாரிக்கின்றன.

கம்பளி பின்னலாடை உற்பத்தி நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம், குளிர் கால ஆடைகளையும் அதிகளவு தயாரிக்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் சீராக ஆடை தயாரிப்பு மேற்கொள்ளலாம். அமெரிக்கா, ஐரோப்பா என சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கம்பளி ஆடைகள் தேவை அதிகம் உள்ளது. எனவே இவ்வகை ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலக அளவில் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வாறு, அவர் பேசினார். கருத்தரங்கில், ‘வுல்மார்க்’ நிறுவன வர்த்தக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பத்மஜா, கம்பளி ஆடைகளுக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். திருப்பூர் பகுதி ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர்கள் பங்கேற்று, கம்பளி ஆடை தயாரிப்பு நுட்பம் குறித்த சந்தேகங்களை வல்லுனர்களிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.

Tags : Wool Production Seminar ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...