தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜவின் கனவு பலிக்காது: அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி

காஞ்சிபுரம்: தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜவின் கனவு பலிக்காது என, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி விஸ்வநாதன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி விஸ்வநாதன் நேற்று, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை, மார்க்கெட் பகுதியில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளாக போர்வீரனாக பணியாற்றுகிறேன். அதனால் நான், அகில இந்திய செயலாளர் மற்றும் கேரள மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஏற்கனவே, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத்  ஆகிய மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி இருக்கிறேன்.

தேர்தல் நேரங்களில் ஆர்எஸ்எஸ், பாஜ, பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மதக் கலவரம், சாதிக் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜவின் கனவு பலிக்காது. தமிழகம் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வாழ்ந்த மண், இங்கு, ஆர்எஸ்எஸ்சின் கனவு பலிக்காது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக மே மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என்றார். முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.விஜயகுமார், முன்னாள் நகர தலைவர் ஆர்.வி.குப்பன், நிர்வாகிகள் அளவூர் நாகராஜன், ஜோஷி, பத்மநாபன், நடராஜன், கே.எஸ்.செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>