×

கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் ஏரியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்த உபரிநீர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஏரியில் உபரி நீர் கால்வாய்கள் சீரமைக்காததால், கிராமங்களுக்குள் ஏரி நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து சமரசம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான வைரமேக தடாகம் ஏரி சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சித்தேரி, பெரியஏரி என இரண்டாக பிரித்து, பெரிய ஏரியில் 8 மதகுகள் மூலமும், சித்தேரியில் 5 மதகுகள் மூலமும் தண்ணீர் பாசனத்துக்கு வெளியேற்றப்படும். ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் காக்கநல்லூர், முருக்கேரி, ஆனைப்பள்ளம், மல்லிகாபுரம், கல்லமாநகர், மல்லியங்கரணை, கட்டியாம்பந்தல், காட்டுப்பாக்கம், மேனல்லூர், பாரதிபுரம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்வதுடன், அங்குள்ள நீர்நிலைகளுக்கு முக்கிய நீராதாரமான உள்ளது.

இந்த நீரை கொண்டு விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்பட பல்வேறு வகையில் பயிரிடுவர். இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் உபரி நீர்கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால், மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள் நிரம்பியது. ஆனால், உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. இதையடுத்து விவசாயிகள், பல்வேறு முயற்சி எடுத்ததால், உத்திரமேரூர் ஏரி நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து உபரிநீர் கலங்கள் வழியாக வெளியேறியது. இதற்கிடையில், உபரிநீர்கால்வாய்கள் முறையாக பராமரித்து, சீரமைக்காததால் கலங்களில் வெளியேறிய உபரிநீர் வேடபாளையம், நீரடி, பட்டஞ்சேரி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்தது. இதில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்க துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதில், வேடபாளையம், குழம்பரக்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உத்திரமேரூர் - வந்தவாசி சாலை வேடபாளையம் அருகே திரண்டனர். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு நிலவியது.


Tags : lake ,residences ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு