×

சத்தியமங்கலம் அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகள் ஆய்வு

சத்தியமங்கலம், டிச.22:  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொமராபாளையம் ஊராட்சியில் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் நஞ்சப்பசெட்டிபுதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜவகர் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 25 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகள் கட்டுமானம் தரமற்றதாக இருந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை வலுவிழந்து இடிந்து விழ துவங்கின. மேற்கூரை கான்கிரீட்டிலிருந்து காரைகள் பெயர்ந்து விழுந்ததால் கான்கிரீட்டில் வேயப்பட்ட கம்பி எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் வீட்டில் படுத்து தூங்கும்போது மேற்கூரையில் இருந்து காரை பெயர்ந்து மேலே விழுகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே உள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு செய்து தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து விரிவான செய்தி கடந்த 18ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து, நேற்று சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப்,  பெருமாள், கொமாரபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகள் நஞ்சப்ப செட்டி புதூர் கிராமத்திற்கு சென்று பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து பழுதான வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடு கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதால் நஞ்சப்பசெட்டி புதூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Inspection ,set houses ,Satyamangalam ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...