×

சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது: உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீச்சு

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்துள்ள நிலையில், உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளாக இருப்பவர் பாலு. தேர்தல் பொறுப்பாளராக மொரப்பூரைசேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சிக்கு வேலை செய்யாதவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதன்படி பகுதிகள், வட்டங்கள் பிரிக்கப்பட்டு 150 பேருக்கு பதவி வழங்கியுள்ளார். வேலை செய்யாத நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக பல்வேறு கோஷ்டிகள் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார்கள் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அதிமுக உறுப்பினர் அட்டையை ரோட்டில் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் 4 ரோடு சத்திரம் அம்மா உணவகம் எதிர்பகுதியில் 50க்கும் மேற்பட்ட அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகள் வீசப்பட்டு கிடந்தது. இதன் மூலம் அதிமுக கோஷ்டி மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் கூறுகையில், ‘சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. பொறுப்பாளர் நிர்வாகிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கட்சிக்காக வேலை செய்வோருக்கு பணி கொடுக்காமல் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள். இப்பகுதி செயலாளராக இருப்பவர் தொண்டர்களையே மிரட்டுகிறார். இதனை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறு உறுப்பினர் அட்டை வீசப்பட்டுள்ளது’ என்றனர்.

இதுகுறித்து பொறுப்பாளர் சிங்காரம் கூறுகையில், ‘அதிமுக உறுப்பினர்களுக்கு, புதிய அட்டையை வழங்க நிர்வாகிகளுக்கு கொடுத்திருந்தோம். அதனை நிர்வாகிகள் யாராவது வீசியிருக்கலாம்’ என்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ghoshdi ,Poole ,Salem Municipal District ,Salem ,Khoshti ,Bhusal ,Balu ,Secretary General ,MLA ,Singaram ,Morapur ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி