×

காஸ் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திமுக மகளிர் அணி தேனியில் ஆர்ப்பாட்டம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம்

தேனி, டிச. 22: சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து, தேனி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தேனி பங்களா மேட்டில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாந்திதாஸ் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், ‘சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு ரூ.100 வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். காஸ் விலை ஏற்றியதை தடுக்காத மாநில அரசை கண்டித்தும் பெண்கள் கொதிப்பில் உள்ளனர். மத்திய அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றயதன் மூலமாக விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு உள்ளது.

இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரில் போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மோடி அரசு மறுக்கிறது. இந்த போராட்டத்தில் கடும் குளிரில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். நாளை (23ம் தேதி) முதல் வருகிற ஜன.10ம் தேதி வரை கிராமம் தோறும் கிராமசபை கூட்டங்களை கூட்டி அதிமுகவை நிராகரிப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக மக்கள் விரோத அரசை நடத்தும் எடப்பாடி அரசு விரைவில் தூக்கி எறியப்படும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், தேனி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரத்தினசபாபதி, பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன், சின்னமனூர் ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர பொறுப்பாளர் செல்வராஜ் மற்றும் தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, பேரூர், கிளை அளவிலான நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு ஊர்வலமாக வந்த மகளிரணியினர் காஸ் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் காலி கேஸ் சிலிண்டரை பாடைகட்டி தூக்கி வந்தனர். மேலும் காஸ் விலை உயர்வால் மீண்டும் பொதுமக்கள் பழைய விறகு அடுப்பு முறைக்கு செல்வதை நினைவூட்டும் வகையில் விறகு அடுப்பையும் தூக்கிவந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : women ,DMK ,team protests ,withdrawal ,Theni ,gas price hike ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...