×

குப்பைக்கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரால் குடியிருப்பில் வசிக்க முடியவில்லை கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்


திண்டுக்கல், டிச. 22: திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பை முருகபவனம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இங்கு குப்பைகளை முறையாக சேகரித்து சுகாதாரமான முறையில் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் மழைக்காலங்களில் குப்பைகளிலிருந்து வெளியே வரக்கூடிய கழிவுநீர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துராஜ் நகர், சிஎஸ்எஸ்ஆர் நகர், ஓசி பிள்ளை நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. அங்கு வரக் கூடிய குப்பை கழிவுநீரால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு புழுக்கள் மற்றும் விஷப்பூச்சிகள் அதிக அளவில் வருகிறது.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் மேலும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கழிவுநீரை பொதுமக்கள் குடியிருப்புக்குள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் பல வருடமாக பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லதா தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் பின்னர் தங்களது பிரச்னைக்கு தீர்வு காணவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : public ,Collector ,apartment ,landfill ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...