×

காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து திமுக வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட மகளிரணி ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச. 22: காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து திருச்சியில் திமுக வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த 1ம் தேதி (டிசம்பர் மாதத்திற்கான விலை) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கவில்லை. அதனால் பழைய விலையில் தொடரும் என மக்கள் நினைத்த நிலையில் கடந்த 2ம் தேதி அதிரடியாக மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.56.50 உயர்ந்தது.

இந்த விலையேற்றத்தை தொடர்ந்து அடுத்து ஒரிரு நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் 15ம் தேதி மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.56.50 உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். ஒரே மாதத்தில் 2 முறை காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து 21ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலங்களில் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுக வடக்கு, மத்திய மாவட்ட மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட துணை செயலாளர் விஜயா ஜெயராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், வடக்கு மாவட்ட அமைப்பாளர் வைதேகி, மாநகர துணை செயலாளர் கலைசெல்வி, விஜயலட்சுமி கண்ணன், தீபஜோதி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த லாரியில் காஸ் சிலிண்டரை கட்டி தொங்க வைத்திருந்தனர்.

இதே போல் சத்திரம் அண்ணா சிலை அருகே திமுக தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லீலாவேலு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ கலந்து கொண்டார். இதில் மாநில மகளிரணி துணை செயலாளர் சல்மா, வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர்கள் மதிவாணன், தர்மராஜ், நீலமேகம், பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கயல்விழி நன்றி கூறினார்.

Tags : protests ,DMK ,districts ,North ,South ,Central ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி