பழைய பஸ் நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லாததால் ரயில்வே மேம்பாலம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும்

திருவாரூர், டிச.22:திருவாரூரில் இருந்து வந்த பேருந்து நிலையமானது கடந்த 46 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அப்போது இருந்து வந்த மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் பேருந்துகள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டதால் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்து வந்தது. மேலும், பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. இதுமட்டுமின்றி இந்த பேருந்து நிலையத்திற்குள் மாநில அரசின் நெடுஞ்சாலையும் இருந்து வருவது போன்ற பல்வேறு காரணங்களால் நகரில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் காரணமாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் பணிகள் துவங்கி முடிக்கப்பட்டு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி முதல்வர் பழனிசாமி மூலம் விடியோ கான்பிரன்சிங் முறையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் பயணிகளுக்கு பலனில்லாமல் இருந்து வருகிறது. காரணம் திருவாரூரிலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பழைய பேரூந்து நிலையத்திற்குள் வராமல் வழியில் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகிலேயே பயணிகளை இறக்கி விடுவதும், திருச்சி, தஞ்சை, மதுரை மற்றும் கும்பகோணம், மன்னார்குடி போன்ற வழிதடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வருவதாலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் பயணிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக திருவாரூர் நகரிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் ரயில்வே மேம்பாலத்தினையே பேருந்து நிறுத்துமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பேருந்திற்காக சில நேரங்களில் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனையடுத்து இங்கு காத்திருக்கும் முதியவர்கள், மற்றும் கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் உட்பட அனைவரும் நிற்பதற்கு கூட உரிய இட வசதியின்றி இருந்து வருகிறது. மேலும் தற்போது மழை மற்றும் பனி காலம் இருந்து வரும் நிலையில் இதன் காரணமாகவும் வெயில் காலங்களில் கோடை வெயிலில் சுருண்டு விழும் நிலையிலும் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த இடத்தில் இருபுறமும் பேருந்து நிழற்குடை அமைத்திட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: