×

வடுவூர் புதுக்கோட்டையில் இரட்டிப்பு வருமானம் தரும் புதிய நெல் ரகம்

நீடாமங்கலம், டிச.22: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற வேண்டிய நோக்கில் புதிய நெல் ரகம் வைகை அணை 1 பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில், இந்த ரகம் 129 நாட்கள் வயதுடையதாகவும், நடுத்தர உயரம், அதிக தூர்கள், சாயா தன்மையும், அரிசியானது சீரக சம்பா அரிசியின் தரத்திற்கு ஈடாகவே இருக்கும். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முதல்நிலை செயல்விளக்க திடல் மூலம் இந்த புதிய ரகத்தினை விவசாயிகளுக்கு கொடுத்து பரவலாக்கம் செய்துள்ளோம். இந்த நெல் பயிர் தற்போது தண்டு உருளும் தருணத்தில் உள்ளது. பிரியாணி மற்றும் குஸ்காவிற்கு மிகச்சிறந்த ரகமாக இருக்கும் என்றார்.

இந்தத் திட்டத்தை பரவலாக்கம் செய்திருக்கும் சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் செல்வமுருகன் பேசுகையில், இந்த ரகம் அதிகபட்ச மகசூலாக 9,500 கிலோ ஒரு எக்டருக்கு கிடைக்கும். அரவைத்திறன் 66 சதவீதம் மற்றும் முழு அரிசி காணும் திறன் 62.1 சதவீதம் இருக்கும் என்றார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், புதிய நெல் ரகம் இலை சுருட்டுப்புழு, குலை நோய் மற்றும் செம்புள்ளி நோய்க்கு நடுத்தர எதிர்ப்பு திறன் கொண்டது என்றார். உணவியல் மற்றும் சத்தியல் உதவிப் பேராசிரியர் கமலசுந்தரி பேசுகையில் -சமைத்த சாதம் மிருதுவாகவும், வாசனையாகவும், உதிரியாகவும், சாதம் நீளும் தன்மை 2.1 மில்லி மீட்டர் ஆகவும், சீரக சம்பாவை போன்ற நல்ல சுவை பண்புகள் இருக்கும் என்றார். இப்பயிற்சியில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் திட்ட கிராம முன்னோடி விவசாயி குபேந்திரன் உட்பட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags : Vaduvoor Pudukottai ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...