இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேட்டி

தஞ்சை, டிச. 22: இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார். தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறியதாவது: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறு குறு விவசாயிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்படுகிறது. தனியார் மண்டிகளின் ஆதிக்கத்தால் விவசாயிகள் விளை பொருள்களை அவர்களிடம் தான் விற்க வேண்டும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள வேண்டும் என்றால் அந்த சட்டங்களை மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்.

டெல்டாவில் ஏற்பட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையாக உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டத்தை துவங்க உள்ளோம். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆனால் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமானால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>