×

வயல்வெளியில் இறங்கி சடலத்தை சுடுகாட்டுக்கு தூக்கி சென்ற மக்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

தஞ்சை, டிச. 22: திருவோணம் ஒன்றியம் சில்லத்தூரில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் முட்செடிகள் மண்டியதுடன் சேறும் சகதியுமாக மாறியதால் வயல்வெளியில் இறங்கி இறந்தவரின் உடலை மக்கள் தூக்கி சென்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சில்லத்தூர் ஊராட்சி தெற்குத்தெரு சுடுகாடுக்கு செல்லும் பாதை 12 அடியாக இருந்தது. தற்போது இந்த பாதை ஒத்தையடி பாதையாக மாறிவிட்டது. மண் சாலையான இதில் முட்செடிகள் இருபுறமும் மண்டியதுடன் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் முட்செடிகளுக்கு இடையே சேற்றில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்வெளியில் இறங்கி இறந்தவரின் சடலத்தை தூக்கி கொண்டு செல்லும் பரிதாப நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சில்லத்தூர் யாதவர் தெருவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணை தலைவர் முருகேசன் இறந்தார். சாலையில் முட்செடிகளாக இருந்ததால் இறந்தவர் சடலத்தை பாடையில் வைத்து சாகுபடி வயல்களில் இறங்கி உறவினர்கள் தூக்கி சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தமிழ்நேசன் கூறும்போது, இந்த சுடுகாட்டு சாலையை பயன்படுத்தவே முடியாத நிலை உள்ளது.  அரசு அதிகாரிகள் இந்த சாலையில் சுடுகாடு வரை சென்று விட்டு திரும்பினால் ரூ.1 லட்சம் பரிசு தரவும் கிராம மக்கள் தயாராக உள்ளோம். எனவே சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைக்க முன்வர வேண்டும். சாலையை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்றி தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். மேலும் மின்கம்பங்களை நட்டு மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும். இல்லையென்றால் சில்லத்தூர் தெற்குத்தெரு சுடுகாடு மயான கரையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags : field ,crematorium ,protest ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது