×

அறந்தாங்கி அருகே நாகுடியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் குடிநீர் குழாய் உடைந்து சேதம் 10 கிராமங்களில் விநியோகம் பாதிப்பு

அறந்தாங்கி, டிச.22: அறந்தாங்கி அருகே நாகுடியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியின்போது, குடிநீர் குழாய் இணைப்பை உடைக்கப்பட்டதால், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த நாகுடி பகுதியில் பெய்யும் மழைநீர் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் வடிகால் வாரிகள் முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நின்றது. மழைநீர் பல நாட்கள் வெளியேறாமல் தேங்கியதால், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களை பரப்பி வந்தன.

மேலும் மழைநீர் தேங்கியதால் நாகுடி பகுதியில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. மழைநீர் வெளியேறாதது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து பல்வேறு இடங்களில் வடிகால் வாரியில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நாகுடி அருகே வேட்டனூர் சாலை, கட்டுமாவடி சாலையில் நாகுடி மயானம் ஆகிய இடங்களில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால், கடந்த சில நாட்களாக நாகுடி, கீழ்க்குடி, அம்மன்ஜாக்கி, ஏகப்பெருமாளுர், ஏகனிவயல் ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் குடிநீர் இல்லாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, நாகுடி அருகே சேதமடைந்த குடிநீர் குழாய் இணைப்புகளை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drinking water pipe ,rainwater harvesting operation ,Nagudi ,Aranthangi ,villages ,
× RELATED அறந்தாங்கி அருகே மக்களை அச்சுறுத்தும் உடைந்த மின்கம்பம்