புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா ஒரு வாரம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, டிச.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா ஒருவாரம் கொண்டாடப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: 2019-20ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பெற்றதன் அடிப்படையில் சென்ற ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வெகு சிறப்பாக ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு கொண்டாடப்பெற்றது.

இவ்வாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா வருகின்ற 23.12.2020 முதல் 29.12.2020 ஆம் நாள்வரை ஒருவார காலத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றிய வட்டார அளவில் கொண்டாடப்படவுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை, அரசாணையின் படி ஆகியவற்றை வழங்கி சமூக இடைவெளியுடன் கொண்டாடப்படவுள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்தல் தொடர்பில் தொழிலாளர் துறையுடன் இணைந்து வணிக நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்கும் கூட்டமும் நடத்தப்பெறவுள்ளது.

நிகழ்வுகளில் தமிழ் வளர்ச்சித்துறைப் பணியாளர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மாணவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இவ்வாறு கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>