×

பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நவராத்திரி பவனி செப்.20ல் புறப்படுகிறது

நாகர்கோவில், செப். 18: திருவனந்தபுரத்தில் நடைபெறுகின்ற நவராத்திரி விழாவையொட்டி, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்களுடன் நவராத்திரி பவனி, வரும் 20ம் தேதி புறப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் எடுத்து செல்லப்படுவதும், அங்கு பூஜையில் வைக்கப்படுவதும் வழக்கம்.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்ம நாபபுரம் அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங்கள், உடைவாள், வெள்ளிக்குதிரை ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்படும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. 20ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு குமாரகோயிலில் இருந்து குமாரசுவாமியும், வெள்ளிக்குதிரையும் புறப்படுகிறது.

காலை 6 மணிக்கு கல்குளம் நீலகண்டசுவாமி கோயிலுக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து குமாரசுவாமியும், முன்னுதித்த நங்கையும், பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்படுகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிக்கை மாளிகையில், உடைவாள் கைமாறுதல் மற்றும் ஊர்வலம் புறப்படும் நிகழ்வு காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. திருவனந்தபுரம் நோக்கி செல்கின்ற பவனி, இரவு குழித்துறை மகா தேவர் கோயிலை அடைகிறது. 21ம் தேதி காலை 8 மணிக்கு குழித்துறை மகாதேவர் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

22ம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நவராத்திரி மண்டபத்தை பவனி சென்றடைகிறது. 23ம் தேதி காலை 6.30 மணிக்கு கோயில் நவராத்திரி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு பூஜைகள் தொடங்குகிறது. 10 நாட்கள் நவராத்திரி பூஜையை தொடர்ந்து, விஜயதசமி நாளான அக்டோபர் 2ம் தேதி காலை 8 மணிக்கு ஆரியசாலை தேவி கோயிலில் இருந்து வேளிமலை குமாரசுவாமி, வேட்டைக்காக பூஜைப்புர மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலையில் முன்னுதித்த நங்கையுடன் பத்மநாபசுவாமி கோயில் கிழக்கு நடை பகுதியில் சரஸ்வதி மண்டபத்தில் வந்தடைந்து, மகாராஜா திருமனசு காணிக்கை பெறுகின்றனர். தொடர்ந்து 3ம் தேதி ஒரு நாள் நல் இருப்புக்கு பின்னர், 4ம் தேதி காலை சுவாமி விக்ரகங்கள் மீண்டும் குமரி மாவட்டம் புறப்படுகிறது. கிள்ளிப்பாலத்தில் வைத்து விக்ரகங்களுக்கு கேரளா காவல்துறையின் கார்டு ஆப் ஹானர் நிகழ்வு நடைபெறும்.

Tags : Navaratri ,Padmanabhapuram ,Thiruvananthapuram ,Nagercoil ,Navaratri festival ,Lord ,Padmanabhapuram Palace ,Kumari district ,
× RELATED ஓய்வூதியர் தின விழா