அரூர், செப்.18: மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு அதிக அளவிலான மாதுளை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. சீசன் காலங்களில் அரூர் நகரில் சாலையோரங்களில் கடைபோட்டு தள்ளு வண்டிகளில் வைத்து மாதுளம் பழங்களை விற்பனை செய்வது வழக்கம். தவிர, டூவீலர் மற்றும் சைக்கிளில் எடுத்துச்சென்ற வீடு வீடாக மாதுளம் பழங்களை விற்பனை செய்கின்றனர். சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மாதுளையை விரும்பி சாப்பிடுவதுடன் மருத்துவ ரீதியாக ரத்த சுத்தகரிப்பு செய்வதில் மாதுளைக்கு நிகர் ஏதும் இல்லை என்பதால் மருத்துவர்கள் மாதுளம் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் மாதுளையை வாங்கி செல்கின்றனர். சாலையோரங்களில் மாதுளை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
