கரூர்: நான் முன்னெடுப்பது ஆட்சி, அதிகாரத்துக்கான போராட்டம் அல்ல. இது, தமிழ்நாட்டுக்கான போராட்டம், அனைவரும் ஓரணியில் திரளுவோம் என்று கரூர் முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். கரூர்-திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டி அருகே நேற்று மாலை நடந்த திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
திறமை, உழைப்பு, அறிவு, ஆற்றல் அனைத்தையும் ஒருங்கே பெற்ற திராவிட முன்னேற்ற கழகம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழி நின்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் நாம். 2019ம் ஆண்டு தேர்தலில் இருந்து நாம் எதிர்கொண்ட அனைத்திலும் வெற்றி பெற்று வந்துள்ளோம். எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றிகளை பெற்று வந்துள்ளோம். இந்த வெற்றிப்பயணம் 2026லும் தொடரும். திராவிட மாடல் 2.0 நிச்சயம் அமையும். நான் பெருமையுடன் சொல்கிறேன்…
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது… எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்… இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள்… “கழகம் நம்மைக் காத்தது! நாம் கழகத்தை காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்க முடியாது! உங்களுக்குத் தலைமை தொண்டனாக இருப்பது, என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு.
உங்கள் உழைப்பைத் தொடர்ந்து கொடுத்து, திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும்! அதன்மூலமாக, தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது என்று நாம் புது வரலாறு படைக்க வேண்டும்! வரலாறு படைக்கலாமா! தயாராகி விட்டீர்களா?. அதனால் தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை முன்னெடுத்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று அனைவர் வீடுகளுக்கும் சென்று ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்த்துள்ளோம்.
ஒரு கோடி குடும்பங்கள் நம்மை நம்பி இணைந்துள்ளார்கள் என்றால் என்ன காரணம். தமிழகத்தை காக்கும் காவலன் திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான். அதற்கு துணையாக இருப்போம் என்று மக்களும் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் அது காவிக்கொள்கை. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடி கொண்டிருக்கிறது. அந்த கொள்கையின் அரசியல் இயக்கம் யார் என்றால் பாஜ. ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம்.
2 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி என்ன பேசி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜ தான் என்று அவர் உண்மை பேசி இருக்கிறார். அந்த கைப்பாவை அரசை தூக்கி எறிய திமுக தான் காரணம் என ஒன்றிய பாஜ அரசு நமது மீது வன்மத்தை காட்டி வருகிறது. ஆகையால் தான் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக, திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா?. இந்தியாவில் முதல்முறையாக மாநில கட்சி ஆட்சி பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம். 74 ஆண்டு கால வரலாறு உள்ளது நமக்கு.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என்று தான் பேசுகின்றனர். இப்பவும் சில பேர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது திமுகவிற்கு நாங்கள் தான் மாற்று என்று பேசுகின்றனர். என்ன மாற்ற போகின்றனர். என்ன மாற்ற போறாங்க. தமிழ்நாட்டு வளர்ச்சியை மாத்தி பின்னாடி இழுத்துட்டு போகப்போகிறார்கள். நம்ம கொள்கையோடு சிறந்த கொள்கையை யாராவது பேசுகிறார்களா. மாற்றம் மாற்றம் என்று சொன்ன எல்லாரும் மறைந்து போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றும் மறையவில்லை. இது தான் தமிழ்நாடு பாலிடிக்ஸ். நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. தொகுதி வரையறை என்று சொன்னவுடனே எதிர்த்து நிற்கிறோம். கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால் சட்ட ரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம். முக்கியமாக மாநிலங்கள் தான் வலிமையான நாட்டுக்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல மத்திய அரசு அல்ல ஒன்றிய அரசு என்று அடித்து சொல்கிறோம். இப்படி போராடி போராடி தமிழ்நாட்டை தலை நிமிர்த்துகிறோம்.
இப்படி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை ஒரு நாளும் தலைகுனிய விடமாட்டோம். அதனால்தான் சொல்கிறேன், பேரறிஞர் அண்ணா கொள்கை பட்டாளமே, தலைவர் கலைஞருடைய உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, தனி நபர்கள் தோன்றுவார்கள், மறைவார்கள், கட்சிகள் வரும், போகும். ஆனால், தமிழ்நாட்டின் தனி திறமை நிரந்தரமானது. தமிழ் மொழியின் பெருமை நிரந்தரமானது. நம்மளுடைய மக்களின் உரிமை காக்கப்படனும். இந்த தமிழ் மண்ணுதான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது.
இந்த மண்ணை காக்கின்ற பொறுப்பும், கடமையும் நமக்கு தான் இருக்கு. டெல்லி நம்ம மேல் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒன்றா இரண்டா, இந்தி மொழியை திணிக்கிறார்கள், மாணவர்களை பழி வாங்கக்கூடிய நீட் தேர்வை விலக்க மறுக்கிறார்கள். நமது பசங்க படிப்பதற்கான கல்வி நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள். கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்கிறார்கள். ஆனால் அந்நாளும் சரி , இந்நாளும் சரி அடக்கு முறைக்கு இங்கு நோ என்ட்ரி தான்.
ஆதிக்கத்துக்கு இங்க நோ என்ட்ரி தான். திணிப்புக்கு இங்க நோ என்ட்ரி தான். மொத்தத்தில பாஜவுக்கு இங்கு நோ என்ட்ரிதான். இது பெரியார் அண்ணா கலைஞர் செதுக்குன தமிழ்நாடு. மூன்று முறை ஒன்றியத்தை தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்க மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லை ஏன், இன்னுமா உங்களுக்கு எங்களை பற்றி தெரியல. இந்த முப்பெரும் விழாவை டிவில, சோசியல் மீடியாவில் பார்த்துக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக நாம் போராடி எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்து நாம் பெற்றுத் தந்த உரிமை எல்லாம் நம் முன்னாடியே பறிபோக அனுமதிக்கலாமா?.
பாஜவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து மாநிலங்களே இருக்க கூடாது என்ற நோக்கில் தான் நகர்வார்கள். ஏற்கனவே காஷ்மீரில் ட்ரையலை பார்த்து விட்டார்கள். எப்படி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று ஒரு நிலை உருவானதோ தமிழ்நாடு போராடி மொழிப்போர் நடத்திய ஒட்டுமொத்த இந்தியாவை காப்பாற்றியதோ, அதுபோல் உரிமை போரை நடத்தி நாட்டை காப்பாற்றும் நிலை நமக்கு உள்ளது. நாம் செய்யவில்லை என்றால் நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும். இதற்கு போராடவில்லை என்றால் எதற்கு போராடுவது. இதுதான் முக்கியம்.
இந்த போராட்டத்தில் முன் களவீரனா, 23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் உங்களுடன் இருக்கிறேன். இந்த மேடையில் நின்று உறுதியுடன் சொல்கிறேன். நம் தாய்மார்கள், உழவர்கள், சகோதரர்கள் அனைவரையும் காக்க நான் தொடர்ந்து உழைப்பேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொடுப்பேன். நமக்கு துணையாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விதைத்த இன உணர்வு நம்மிடத்தில் உள்ளது.
8 கோடி தமிழ் மக்களின் ஆதரவும், ஆற்றலும் நமக்கு பக்க பலமாக உள்ளது. இதே உறுதியுடன் போராடுவோம். இப்பொழுது நாம் முன்னெடுக்கும் போராட்டம், ஒரு கட்சிக்கான போராட்டமோ, முதலமைச்சர் என்ற பொறுப்புக்கான போராட்டமோ, ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமோ அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்டம், தமிழ்நாட்டுக்கான போராட்டம். தமிழ்நாடு முழுக்க ஓரணியில் திரள வேண்டும்.
கரூர் மண்ணில் நின்று பெரியார் பிறந்த நாளில் உரக்க சொல்லுவோம். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். டெல்லிக்கு கேட்கும் அளவிற்கு அனைவரும் சேர்ந்து சொல்ல வேண்டும், தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அனைவரும் ஊருக்கு திரும்பும் நேரத்தில் பத்திரமாக செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* மக்கள் வௌ்ளத்தில் நீந்தி வந்த முதல்வர்
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணியளவில் வந்து சேர்ந்தார். அதற்கு முன்னதாக விழா நடைபெறும் மைதானத்தின் முகப்பில் இருந்து தனது திறந்த வௌி வாகனத்தில் நின்று இரண்டு பக்கங்களிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறே முதல்வர் வருகை தந்தார்.
திமுக சார்பில் மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும் போதெல்லாம் தலைவர்கள் நேரடியாக மேடைக்கு வருவார்கள். ஆனால் முதல் முறையாக நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த முதல்வர் முகப்பில் இருந்து தொண்டர்கள் அமருவதற்காக 2 பக்கமும் போடப்பட்டிருந்த சேர்களுக்கு நடுவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த சாலையில் மெதுவாக வாகனத்தில் வந்தார். அப்போது, கூடியிருந்த தொண்டர்கள் மிக உற்சாகமாக கையசைத்து உணர்ச்சி பொங்க முதல்வரை வரவேற்றனர்.
* குலுங்கியது கரூர்
திமுக முப்பெரும் விழாவால் கரூர் குலுங்கியது என்றே சொல்லலாம். இந்த விழாவிற்காக டெல்டா மாவட்டம் முழுவதும் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்தும் பல லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர். பல ஆயிரம் வாகனங்களில் வந்திருந்த தொண்டர்கள், விழா மைதானத்திற்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். பல லட்சம் தொண்டர்கள் கூடினாலும், பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ, வர்த்தக நிறுவனங்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் ராணுவ ஒழுங்குடன் தொண்டர்களும், பொதுமக்களும் நடந்து கொண்டதை கரூர் மக்கள் வியப்புடன் பார்த்தார்கள்.
* ராபின்சன் பூங்காவை நினைவுப்படுத்திய விழா
திமுக பேரியக்கம் கடந்த 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது. திமுகவின் தொடக்கவிழா ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற போது. அப்போது மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தொண்டர்கள் கலையாமல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்த திமுக தொடக்கவிழாவை நினைவு படுத்துவது போல் இந்த கரூர் முப்பெரும் விழா இருந்தது. ஏனென்றால் முப்பெரும் விழா கரூரில் நடைபெற்ற போது, முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மழை கொட்டியது. ஆனாலும் தொண்டர்கள் கலையாமல் முதல்வரின் பேச்சை கடைசி வரையிலும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
* சிறப்பான கட்சி பணி 66 பேருக்கு விருது, பரிசு
திமுக முப்பெரும் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடிய போதும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் , குழப்பங்களும் இல்லாமல் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதற்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த விழா மேடையிலேயே முப்பெரும் விழா பணிகளை மிகச்சிறப்பாக செய்ததற்காக 16 பேருக்கு பண முடிப்பு மற்றும் சான்றிதழ்களை முதல்வர் வழங்கி கவுரவித்தார். இதே போல் மண்டல வாரியாக சிறப்பாக செயல்படும் 50 நிர்வாகிகளுக்கும் உத்வேகமூட்டும் விருதும் வழங்கப்பட்டது.
* ஒரு லட்சம் சேர்கள் போடப்பட்ட பொதுக்கூட்டம்
திமுக முப்பெரும் விழாவிற்காக கரூர்-திருச்சி சாலையில் உள்ள கோடாங்கிபட்டியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 60 அடி அகலம், 200 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. திடலின் முன் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பம் நட்டப்பட்டு இருந்தது. தொண்டர்கள் அமர்வதற்காக ஒரு லட்சம் சேர்கள் போடப்பட்டிருந்தன. முதல்வர் வருவதற்கு முன்பாகவே ஒரு லட்சம் சேர்களும் நிரம்பிவிட்டன.
சேர்கள் நிரம்பிய பிறகும், தொண்டர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தனர். இதனால் சேர்கள் நிரம்பிய பிறகும், ஒன்றரை லட்சம் தொண்டர்கள் நின்று கொண்டே விழாவில் கலந்து கொண்டனர். விழா நடைபெறும் போது தொண்டர்கள் சாப்பிடவும், தண்ணீருக்காகவும் அலையக்கூடாது என்பதற்காக போடப்பட்டிருந்த ஒவ்வொருட சேரிலும் ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொண்ட பை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதற்காக பல லட்சம் வாட்டர் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டிருந்தது.
* கொட்டும் மழையிலும் கலையாத தொண்டர்கள்
திமுக முப்பெரும் விழாவின் போது பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் மேகம் சூழ்ந்து மழை வருவது போல் இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணியளவில் பேசத்தொடங்கியதும் மழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் ராணுவக்கூட்டம் போல் தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் கலைந்து செல்லாமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்து முதல்வரின் உரையை கடைசி வரையிலும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இதில் தொண்டர்கள் குடையை பிடித்தபடியும், துணியை தலையில் போட்டுக்கொண்டும், நாற்காலியை குடைபோல் பிடித்துக்கொண்டு நின்றும் பேச்சை கேட்டனர். அப்போது முதல்வர் பேசும் போது, உங்களிடம் பேசுவதை விட கொட்டும் மழையிலும் கூடியிருக்கும் உங்களின் எழுச்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உடனே தொண்டர்கள் பக்கம் இருந்து முதல்வர் பேச்சு முடியும் வரையிலும் தொடர்ந்து விசில் பறந்த வண்ணமாக இருந்தது.
* 2026 தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி: செந்தில்பாலாஜி
முப்பெரும் விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டின் கழகத்தின் கோட்டையாம் கரூரில் முப்பெரும் விழா நடத்திட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. மேற்கு மண்டலத்திலிருந்து சொல்கின்றேன், தளபதியின் பாதம் தொட்டு உறுதியாக சொல்கின்றேன், 2026ல் திமுகவின் வெற்றி உறுதி. எதிரிகள் யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும் எத்தனை பேராக வந்தாலும் உறுதியாக சொல்கின்றேன் நாம் தான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம்,’’ என்றார்.
* வெல்வோம் 200… படைப்போம் வரலாறு… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
முப்பெரும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,‘‘கலைஞர் நின்று வென்ற கரூர் மாவட்டத்தில் இருந்து வெற்றியை துவங்குவோம். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வென்று, வரலாறு படைப்போம். கரூர் முப்பெரும் விழாவும் வரலாற்றில் இடம்பெறும்,’‘என்றார்.
* கனிமொழி அல்ல…கர்ஜனை மொழி…
முப்பெரும் விழாவில் எம்பி கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்பி கனிமொழியை கர்ஜனை மொழி என பாராட்டியதோடு, எனதருமை தங்கை பார்த்தால் தான் கனிமொழி… நாடாளுமன்றத்தில் அவர் பேசினால் கர்ஜனை மொழி. திராவிட இயக்கத்தின் திருமகளாகவும், பெரியாரின் பேத்தியாகவும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார் என்றார்.
* புதிய பகைவர்களையும் வெல்வோம்: கனிமொழி எம்பி
முப்பெரும் விழாவில் கனிமொழி எம்பி பேசுகையில்,‘‘பெரியார் விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொட்டும் மழையிலும் இங்கே நின்று கொண்டிருக்கக் கூடிய உடன்பிறப்புகளை பார்க்கும் பொழுது இந்த படை போதுமா, எந்த தேர்தலையும் எந்த பகைவர்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும், முக்கியமாக, புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும், அத்தனை பேரையும் வென்று காட்டுவோம், வென்று காட்டுவோம்’’என்றார்.
* தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் அது காவிக்கொள்கை. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடி கொண்டிருக்கிறது.
* திமுகவிற்கு நாங்கள் தான் மாற்று என்று பேசுகின்றனர். என்ன மாற்ற போறாங்க. தமிழ்நாட்டு வளர்ச்சியை மாத்தி பின்னாடி இழுத்துட்டு போகப்போகிறார்கள்.
* மாற்றம் மாற்றம் என்று சொன்ன எல்லாரும் மறைந்து போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றும் மறையவில்லை. இது தான் தமிழ்நாடு பாலிடிக்ஸ்.
* முழுசா நனைந்த பிறகு முக்காடு எதுக்கு? கொள்கை இல்லாத தொடை நடுங்கி பழனிசாமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சி பொறுப்புக்கு வந்தப்ப எவ்வளவோ நெருக்கடியில் ஆட்சி பொறுப்பு ஏற்றோம். ஒரு பக்கம் நிதி பற்றாக்குறை, இன்னொரு பக்கம் கொரோனா பெருந்தொற்று, இதெல்லாம் தாண்டி நான்கரை ஆண்டு இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவிற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாடு நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சி எட்டியிருக்கிற ஒரே மாநிலம் எதுவென்றால் தமிழ்நாடு என நெஞ்சு நிமிர்த்தி சொல்கின்ற அளவுக்கு முதல்நிலை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம்.
இதனால் தான் நமது திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை எல்லாம் அள்ளி வீசுகிறார்கள். அவருடைய கண்ணீர் ஆட்டுக்காக ஓநாய் வடிக்கிற கண்ணீர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஆட்சி அதிகாரம் இருக்கின்ற போது எதையும் செய்யாமல், தமிழ்நாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாமல் அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். பாஜ தன்னோடு இருக்கிறது என்று இப்பவும் வாய் துடுக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
எதிர்கட்சித் தலைவரின் மாண்பு இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி கொண்டிருக்கிறார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் பழனிசாமி தரத்தை மக்கள் தெளிவாக எடை போட்டு பார்ப்பார்கள் என்று நான் விட்டு விட்டேன். ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அதிமுகவை அடகு வைத்து விட்டார். திராவிடம் என்றால் என்ன என்று கேட்டபோது அதெல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னவர். திராவிடம்னா என்னன்னு தெரியாமல் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
அதுதான் வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்று சொன்னார்கள். அதை இப்போது பழனிசாமி, அடிமையிசம் என்று மாற்றி அமித்ஷாவே சரணம் என மொத்தமாக சரண்டர் ஆகி விட்டார். முழுசா நனைந்த பிறகு முக்காடு எதுக்கு என்று கேட்பார்கள். அந்த மாதிரி நேற்று டெல்லியில் கார் மாறி மாறி போன பழனிசாமியை பார்த்து இப்போது எல்லாரும் என்ன சொல்லுறாங்க என்று தெரியுமா.காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சிப் எதற்கு என்று தான் எல்லாரும் கேக்குறாங்க.
இதுல அவருடைய தரம் தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா. தேவை இல்லை தான். ஆனால் மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கு. அதுவும் வெறும் சொல்லால் அல்ல. செயல்களாலும், திட்டங்களாலும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயண திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம்,
நான் முதல்வன் திட்டம் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்க 48, ஊட்டச்சத்தை உறுதி செய், தோழி விடுதி, கலைஞர் கனவு இல்லம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம், அன்பு கரங்கள் என லிஸ்ட் பெருசா இருக்கு. இது பற்றி நான் சொல்வதைவிட கோடிக்கணக்கான மக்களே தினமும் சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல ஒன்றிய பாஜ அரசு செயல்பாடுகள் அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்த்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
