×

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் சிலையை செப்.19ல் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகின்ற 19.9.2025 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார்கள்.

வீரமங்கை இராணி வேலுநாச்சியார், மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலே வாள் வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் உள்ளிட்ட போர்க்கலைகளைக் கற்றார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார். அதனால், சிவகங்கை சமஸ்தானத்தின் இராணியானார். 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்தனர். காளையார்கோவில் போரில் மன்னர் முத்துவடுகநாதர் கடுமையாகப் போர் புரிந்தபோதும் சூழ்ச்சி காரணமாக வீர மரணமடைந்தார்.

அந்நிலையில், வீரமங்கை வேலுநாச்சியார், சிவகங்கையை விட்டு வெளியேறி, காடுகள் வழியே திண்டுக்கல்லை அடைந்தார். அங்கு கோபால் நாயக்கர் உதவியுடன் ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஆகியோர் உதவியையும் பெற்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடிவு செய்தார். ஹைதர் அலி வேலுநாச்சியாரின் போர்த்திறனைப் பாராட்டி ஆயுதங்களையும், படை வீரர்களையும் வழங்கினார். இழந்த சிவகங்கையை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன், சிவகங்கையை நோக்கி படை நடத்திச் சென்று, ஆவேசத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் மகளிர் படைத்தளபதியாகத் திகழ்ந்தவர் குயிலித்தாய். அவர் அப்போரில் ஆங்கிலேயரை அழிப்பதில், வேலுநாச்சியாருக்குப் பெருந்துணையாக நின்று உடம்பில் தீ வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்கிடங்கில் குதித்து அவர்களின் ஆயுதங்களை அழித்தார். அதனால், அஞ்சி ஓடிய வெள்ளையரை விரட்டி சிவகங்கை அரியணையை மீண்டும் கைப்பற்றினார் வீராங்கனை வேலுநாச்சியார். அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கைச் சீமையைச் சிறப்பாக ஆட்சி செய்தார். மக்கள் நலனுக்காக நிலம், வரி, வேளாண்மை, கல்வி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பின்னர், தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருக்கு ஆட்சியை வழங்கி அவருக்குத் துணை புரிந்தார்.

வட இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த வீராங்கனை ஜான்சி ராணி வாழ்ந்த (கி.பி. 1835 – 1858) காலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி ” வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் 1796 டிசம்பர் 25 அன்று மறைந்து அழியாப் புகழ் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை வேலுநாச்சியாரின் வீரத்தினை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து போற்றிடும் வகையில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் வேலுநாச்சியார் திருவுருவச் சிலை நிறுவப்படும் என 2024 – 2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 50 இலட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் 19.9.2025 அன்று திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார்கள்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Rani Velunachiyar ,Chennai ,Tamil Nadu ,Veeramangai ,Gandhi Mandapam complex ,Guindy, Chennai ,Department of Public Relations ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...