×

3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று குமரி வருகை: அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றுகிறார்

அருமனை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று குமரி மாவட்டம் வருகிறார். அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டி அவர் உரையாற்றுகிறார். அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 23வது கிறிஸ்துமஸ் விழா, அருமனையில் இன்று (22ம் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை வகிக்கிறார். கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் வரவேற்று பேசுகிறார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் மற்றும் பேராயர்கள், கிறிஸ்தவ இயக்க நிர்வாகிகள் பேசுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். முன்னதாக அருமனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 50 கலைக்குழுக்கள், 1000 கலைஞர்கள் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் மற்றும் முதலமைச்சருக்கு வரவேற்பு ஆகியவை நடக்கிறது.
இந்த விழா ஏற்பாடுகள் குறித்து கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் கூறியதாவது: அருமனை கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவ மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும், 23வது ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கு முன் நடந்த விழாக்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் சரத்குமார், தியாகராஜன், பிரசாந்த், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்பட பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பல்ேவறு கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் ஊர்வலம் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பம்சம் ஆகும். மதநல்லிணக்க விழாவாக இது நடக்கிறது. இந்த விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு தூத்துக்குடி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் நாகர்கோவில் வருகிறார். கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்குகிறார். அப்போது குமரி மாவட்டத்தில் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ சீட் பெற்ற, குமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 12 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்து இரவு 8 மணியளவில் காரில் அருமனை புறப்பட்டு செல்கிறார். அங்கு கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி உரையாற்றும் முதலமைச்சர், பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, திருநெல்வேலி செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : Edappadi Palanisamy ,Kumari ,Christmas ,Arumana ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...