×

செங்கம் அருகே மினி கிளினிக் திறப்பு விழா: அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்

செங்கம், டிச.21: செங்கம் அருகே மினி கிளினிக் திறப்பு விழாவில், அமைச்சர் முன்னிலையில் கோஷ்டி மோதல் காரணமாக அதிமுகவினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் அதிமுகவினர் பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கட்சி கூட்டங்கள், விழாக்கள் போன்றவற்றில் தங்களுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அதிமுகவினர் மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தில் நேற்று முன்தினம் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீரா வரவேற்றார். விழாவையொட்டி, கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் விழா நடந்த அரங்கில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, மினிகிளினிக்கை திறந்து வைத்து பேச அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விழா மேடைக்கு வந்தார்.


அப்போது, அமைச்சருக்கு சால்வை அணிவிப்பதிலும், விழா மேடையில் அமர்வதிலும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தகராறு செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதேபோல், செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவிலும் பேனர் வைப்பது தொடர்பாக அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.

கோஷ்டி மோதல் காரணமாக அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தில் மினி கிளினிக்கை திறந்து வைக்க வந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை வரவேற்பதில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

Tags : faction clash ,AIADMK ,Mini Clinic Opening Ceremony Near Chengam ,Minister ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...