குடிபோதையில் நடந்த ராணுவ வீரர் கொலை: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்; காட்பாடி அருகே பர்த் டே பார்ட்டியில் தகராறு

வேலூர், டிச.21: காட்பாடி அருகே பிறந்த நாள் மது விருந்தில் நடந்த தகராறில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர், குடிபோதையில் நடந்த தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். வேலூர் அடுத்த காட்பாடி ஜாப்ராபேட்டையை சேர்ந்தவர்கள் யோகராஜ்(24), தீபக்(23), நேதாஜி(23). மூன்று பேரும் நண்பர்கள். இதில் யோகராஜ் மற்றும் தீபக் இரண்டு பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றிவந்த நிலையில் யோகராஜ் ஒரு வாரம் முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். தீபக் 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி யோகராஜூக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 2 பேருக்கும் இரவு மது விருந்து வைத்துள்ளார். மது விருந்து முடிந்த நிலையில் போதை ஏறாததால் நண்பர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கழிஞ்சூர் ரயில்வே கேட் அருேக பிளாக்கில் மது பாட்டில் விற்கும் நிர்மலா(38) என்ற பெண்ணிடம் மது வாங்க வந்தனர். மது வாங்கும் போது ஏற்கனவே அங்கு மது வாங்க பைக்கில் வந்திருந்த மற்றொரு கோஷ்டிக்கும், இவர்களுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் யோகராஜ் தரப்பினரை எதிரதரப்பினர் தாங்கள் வைத்திருந்த சிறிய கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரர் யோகராஜ் தனியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தீபக் மற்றும் நேதாஜி ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அங்கு கள்ளச்சந்தையில் மது விற்ற நிர்மலா, அவரது கணவர் குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலையாளிகள் 3 பேரும் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஏடிஎஸ்பி மதிவாணன், டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் சத்துவாச்சாரியில் பதுங்கியிருந்த கொலையாளிகள் சத்துவாச்சாரியை சேர்ந்த வினோத்குமார்(23), பொன்னியம்மன் நகரை சேர்ந்த விஜய்(23), தென்றல் நகரை சேர்ந்த அக்ஷயகுமார்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். வினோத்குமார் பெயின்டராகவும், விஜய் காய்கறி கடையிலும் வேலை செய்து வருகின்றனர். பட்டதாரியான அக்ஷய்குமார் போலீஸ் எஸ்ஐ மகனாவார்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாரில் வினோத்குமாரும், அவரது நண்பர்களும் மது அருந்தியுள்ளனர். இவர்களும் போதை ஏறாததால், மேலும் மது அருந்துவதற்காக கழிஞ்சூர் நிர்மலாவிடம் வந்துள்ளனர்.

அங்கு மேலும் மது அருந்தியதால் முழு போதையில் இருந்த நிலையில், அங்கு வந்த யோகராஜ் தரப்பினருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இருதரப்புமே போதையில் சுயநிலையை இழந்த நிலையில் தகராறில் ஈடுபட்டு, அது கொலையில் முடிந்துள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் நேற்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை உட்பட மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. தொடர்ந்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>