×

மாமல்லபுரத்தில் 8 மாதங்களுக்கு பிறகு புராதன சின்னங்களை காண குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 8 மாதங்களுக்கு பிறகு புராதன சின்னங்களை காண விடுமுறை தினமான நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க 2 ஆயிரம் ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் 12 மணிக்கு புக் ஆகி விட்டது. பின்னர் வந்த பயணிகள் கவுன்டரில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக உலக புகழ்வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் கடந்த மார்ச் 16ம் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர், 8 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 14ம் தேதி காலை 8 மணிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டது. மேலும், தினமும் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் ஆன்லைனில் பதிவு செய்து வருபவர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அப்படி பதிவு செய்யாமல் வருபவர்கள் இங்கு நேரடியாக வந்து இங்குள்ள பார்கோடு ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் செலுத்தி சுற்றிப் பார்க்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பயணிகள் குவிந்தனர். இதனால், மாமல்லபுரம் நேற்று களை கட்டியது. மேலும், காலை முதல் 12 மணி வரை 2 ஆயிரம் டிக்கெட்டுகள் பயணிகளால் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு சில பயணிகள் ஏமாற்றத்துடன் செய்வதறியாது நின்றிருந்தனர். பின்னர், தொல்லியல் துறை சார்பில் கவுன்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி புராதன சின்னங்களை கண்டு ரசித்தும், அவற்றின் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்து வீடு திரும்பினர்.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ