×

தனி சட்டம் இயற்றப்படாததால் வழக்கு பதிவு செய்வதில் சிக்கல் கொடிகட்டி பறக்கும் குட்கா விற்பனை: கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார்

பெரம்பூர்: குட்கா என்ற பெயரை கேட்டாலே மந்திரிகள் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை பதறிப் போகின்றனர். காரணம் குட்கா விவகாரத்தில் அந்த அளவுக்கு பல ஊழல்கள் நடந்து வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனாலும், சென்னையில் குட்கா விற்பனை குறைந்தபாடில்லை. தினசரி இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரணம், குட்கா விற்பவர்களை யார் கைது செய்வது என்பதுதான். போலீசார், குட்கா விற்பவர்களை கைது செய்தால் இதற்கு என்று தனியாக தனி சட்டம் இயற்ற படாததால் சாதாரண வழக்கு போட்டு கைது செய்கின்றனர். அதாவது, உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருளை விற்றதாக கைது செய்யும் நிலை உள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் 2 அல்லது 3 நாட்களிலேயே வெளியே வந்து விடுகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவு எப்போது வருகிறதோ அப்போதுதான் இவர்கள் குற்றவாளி என கருதப்படுவார்கள். அதில் கொடிய விஷத்தன்மை உள்ளது என வந்தால் மேற்படி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். அப்படி, இல்லை என்று வந்துவிட்டால் போலீசாரே வழக்கை நடத்த மாட்டார்கள். குட்கா வழக்கில் இப்படி ஒரு சிக்கல் உள்ளது. மேலும், குட்கா விற்பவர்களை போலீசார் பிடித்து சென்றாலும், இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் பிடிக்க வேண்டும் எனக்கூறி சில மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கை தள்ளுபடி செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
 
குட்கா உணவு சம்பந்தப்பட்ட பொருள் என்பதால் அதை உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை உள்ளதால் அவர்கள் குட்கா விற்பனையை கண்டுகொள்வதில்லை. சிறு கடைகளில் குட்கா விற்றால் மட்டுமே பெயரளவிற்கு அவர்கள் அபராதம் மட்டும் விதித்துவிட்டு சென்று விடுகின்றனர்.  போலீசார் போன்று விசாரனை நடத்தி  எங்கு வாங்குகிறீர்கள், எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்றெல்லாம் கேள்வி கேட்பது கிடையாது.

எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ற வகையில் அபராதம் மட்டும் விதித்துவிட்டு செல்கின்றனர். இதனால், வெளி மாநிலங்களில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, வட சென்னையில் பல இடங்களில் குடோன்கள் அமைத்து சிலர் குட்காவை மொத்த விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில்கூட கொடுங்கையூர்  பகுதியில் ஒரே இடத்தில் 7 டன் அளவிற்கு குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்ற போட்டா போட்டி காரணமாக கொடுங்கையூர் போலீசாருக்கும், ஆர்கேநகர் போலீசாருக்கும் 2 நாட்களாக பஞ்சாயத்து நடந்தது.

ஒருவழியாக கொடுங்கையூர் போலீசார் இந்த வழக்கில் ஒருவரை கைது செய்தனர். அந்த அளவிற்கு குட்கா வழக்குகளை கையாள போலீசார் திணறுகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்படும் குட்காவை பெட்டி பெட்டியாக காவல் நிலையத்தில் கொண்டுவந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால், காவல் நிலையத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதற்கு மாற்றாக பிடிபடும் பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்புவதற்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதி குட்கா பொருட்களை அடுத்த 10 நாட்களில் அழித்துவிட வேண்டும் என்றும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்டவைகளுக்கு எப்படி அதற்கு தனி சட்டம் உள்ளதோ, அதே போன்று குட்காவுக்கும் தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். குட்கா விற்பவர்களை போலீசார் பிடித்து சென்றாலும், இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் பிடிக்க வேண்டும் எனக்கூறி சில மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கை தள்ளுபடி செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

* மாதம்தோறும் மாமூல் வசூல்
உணவு பாதுகாப்புத் துறையில் உள்ள சில அதிகாரிகள், குட்கா வியாபாரிகளிடம் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை மாமூல் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை அனுமதிப்பதாகவும், இதுதொடர்பாக சோதனை நடத்தாமல் கல்லா கட்டி வருவதாகவும், இதற்கு ஒருசில போலீசார் உதவியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : law Sale ,
× RELATED தனி சட்டம் இயற்றப்படாததால் வழக்கு...