ரங்கம் அரசு மருத்துவமனையில் குடிநீரை தேடி அலையும் அவலம்: சுகாதாரமில்லாத கழிப்பறைகள்

மண்ணச்சநல்லூர், டிச.21: ரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் அருகே அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு மண்ணச்சநல்லூர், லால்குடி, சமயபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையான ரங்கம் அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 150 படுக்கை வசதிகளுடன் நவீன உபகரணங்கள் வசதியுடன் மேம்படுத்தப்பட்டது.

இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டு, ஆண்கள், பெண்கள் அறுவை சிகிச்சை வார்டு, காப்பீட்டு திட்ட அறுவை சிகிச்சை சிறப்பு வார்டு என அமைந்துள்ளது. மேலும் இங்கு மிக துல்லியமாக கணக்கிடும் டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடிஸ்கேன், இசிஜி, டயாலிசிஸ் வசதியும் உள்ளது.  டயாலிசிஸ் சிகிச்சைக்கான உபகரணங்கள் இருந்தும் இது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாமலும், இயந்திரத்தை இயக்க மருத்துவர் இல்லாமலும் உபயோகப்படுத்தாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது. ஆண், பெண் இருவருக்கும் ஆண்களே இசிஜி எடுக்கும் அவலநிலையும் உள்ளது. இங்கு பிற பணிகளில் உள்ளவர்கள் கூட நோயாளிகளுக்கு கட்டு போடுதல், தையல் போடுதல், மருந்து நிரப்புதல் போன்ற பணிகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள் உடல் ஊனமுற்றோர்கான 3 புறநோயாளிகள் ஓ.பி சீட்டு வழங்கும் கவுன்டர்கள் செயல்பட வேண்டிய நிலையில் தற்போது ஒரே ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அவதிப்படும் நிலை உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஓபி சீட் வழங்கும் கவுன்டரும், பிரசவ வார்டில் உள்ள ஓபிசீட் கவுன்டரும் செயல்படாமல் உள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் வசதி சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் இங்கு தங்கி உள்ள நோயாளிகள் அவசர தேவைக்கு தண்ணீரை தேடி அலைய வேண்டி உள்ளது. அதோடு இல்லாமல் இங்கு உள்ள ஒரே ஒரு குடிநீர் தொட்டியும் வார்டுகளுக்கு வெளியில் உள்ளதால் தண்ணீர் பிடிக்க ஒவ்வொரு முறையும் அங்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் வசதியின்றி, சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. முதல்வர் காப்பீடு திட்டம் கடந்த சில மாதங்களாக சரிவர செயல்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. பெரும்பாலும் இங்கு வரும் நோயாளிகளை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகி விட்டதாக நோயாளிகள் புகார் அளிக்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் படுக்கை வசதிக்கு ஏற்ப போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்று வரும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ரங்கத்தில் அரசு மருத்துவமனை நிலைமை மிக பரிதாபமான நிலையில் உள்ளதை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. மேலும் இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின் உடலை ஒப்படைக்க ரூ.1,500 முதல் 2,000 வரை கட்டாய வசூல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் வருந்துகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் கடைக்கண் பார்வை ரங்கம் அரசு பொதுமருத்துவமனை மீது விழுந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மிக சிறப்பான மருத்துவமனையாக மாற வேண்டும் என்பதே ரங்கம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>