துறையூர் அருகே பட்டிகளில் அடைத்த 14 ஆடுகள் திருட்டு

துறையூர், டிச.21: துறையூர் அருகே 3 பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதாக அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். கோட்டாத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மூக்கன்(60). இவருக்கு அந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக வயல் உள்ளது. அதில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய ஆட்டுப்பட்டியில் இருந்த 6 வெள்ளாட்டுக் கிடாக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதே போல் இவரது வயலருகே உள்ள பெருமாள் மகன் பன்னீர் செல்வம் வயலில் இருந்த பட்டியில் 4 வெள்ளாட்டு கிடாக்களையும், பெரியசாமி மகன் பெருமாளின் பட்டியிலிருந்த 4 வெள்ளாட்டுக் கிடாக்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இவர்கள் மூவரும் ஆட்டுக் காவல் இருப்பதற்காக அன்றிரவு வயலுக்கு சென்றபோது ஆடுகள் திருடு போனது தெரிந்தது. ரூ.1.45 லட்சம் மதிப்பிலான 14 வெள்ளாட்டு கிடாக்கள் திருடு போனது தொடர்பாக மூக்கன் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆடு வளர்ப்போரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>