×

குடிமகன்களின் கூடாரமான இந்திரா நகர்

தஞ்சை, டிச.21:தஞ்சை இந்திரா நகரில் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் சாலையில் நடமாட அச்சமடைந்து வருகின்றனர். தஞ்சை இந்திரா நகரில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும், காவல் துறை உயரதிகாரிகள் அலுவலகம், சினிமா தியேட்டர், சத்துணவு கூடங்கள் உள்ளன. இப்பகுதியில் பகல் நேரத்தில் பொது மக்கள் மற்றும் போலீசாரின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், எந்த விதமான பிரச்னைகளும் இல்லாம் இருக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகி விடுகிறது. குடிமகன்கள், குடித்து விட்டு, பாட்டில்களை வணிக நிறுவனங்களின் வாசலில் உடைத்து போட்டு விடுவதும், இயற்கை உபாதைகளால் அசிங்கம் செய்யும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால், காலையில் கடைகளை திறக்க வரும் கடை உரிமையாளர்கள், வேறு வழியின்றி அவைகளை அப்புறப்படுத்தி விட்டு, கடைகளை திறக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்களிடம் கேட்டால், தகாத வார்த்தைகள் பேசி, தகராறு செய்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் பெண்கள், இளம்பெண்கள் செல்லும் போது, குடிமகன்கள் தகாத வாத்தைகளால் பேசுவதால், அவர்கள் உயிருக்கு பயந்து சென்று வருகின்றார்கள். இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் புகாரளித்தாலும், அவர்கள் கண்டு கொள்வதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், இந்திரா நகர் பகுதி குடிமகன்களின் கூடாரமாகி வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் கூறுகையில், குடிமகன்கள் குடித்து விட்டு, கடை முன் பாட்டில்களையும், மீதமான உணவுகளையும் போட்டு சென்று விடுகிறார்கள். காலையில் வந்து கடையை திறப்பதற்காக வந்தால், துர்நாற்றம் வீசுகின்றது. இதன் அருகில் காவல் துறை உயரதிகாரிகள் அலுவலகம் உள்ளது. ஆனால் அவர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடிமகன்கள் அதிக போதையில், அப்பகுதியிலுள்ள சத்துணவு மையத்திந் சுற்றுசுவரை இடித்து தள்ளினர். இது குறித்து காவல் துறையிடம் புகாரளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே இந்திரா நகர் பகுதி குடிமகன்களின் கூடாரமாகி வருவது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரும் அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.

Tags : Indira Nagar ,citizens ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...