சேதுபாவாசத்திரம் பகுதியில் தொடர் மழையால் கருவாடு காயவைக்கும் பணி பாதிப்பு தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு

சேதுபாவாசத்திரம், டிச.21: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் பகுதிகளில் நிவர் மற்றும் நிரெவி புயல் காரணமாக தொடர் மழையால் கருவாடு காயவைக்கும் பணி பாதிக்கப்படுவதால் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டிணம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டிணம, செம்பியன்மாதேவிபட்டிணம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுப்படகுகளும் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 144 விசைப்படகுகளும் மீன்பிடிதொழில் செய்து வருகிறது.இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இரால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை உடனே விற்பனை செய்தும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

அதேசமயம் இதில் கழிவாக கூடிய மீன்களையும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்து வருகின்றனர். உணவிற்கு பயன்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறிய வகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என அன்றாடம் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நிவர் மற்றும் நிரெவி புயலை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெயில் இன்றி கருவாடு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் வேலை செய்து வந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

Related Stories:

>