- தயாரிப்பாளர்கள் சங்கம்
- பெப்சி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம்
சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீதிமன்ற ஆணையில் இருதரப்பினருக்கும் இடையிலான சமரச ஒப்பந்தம், அவர்களின் 1-1 ஒப்பந்தங்கள் 10-3-2022 முதல் 9-3-2025 வரை இருந்து வந்தது. நடந்து கொண்டிருக்கும் தயாரிப்புகளுக்கான தற்போதைய விதிமுறைகளை பராமரிக்கவும், ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தவும் இருசாராரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்ப பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
கடந்த 1ம் தேதியிட்ட அவர்களின் தீர்வு குறித்து ஒரு கூட்டு செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற ஆணைக்கு இணங்க, இருதரப்பு நிர்வாகிகளும் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில், தமிழ் திரைப்படத்துறையின் நலன் கருதி, உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க, இனி வரும் காலங்களில் எவ்வித தொய்வும் இல்லாமல், ஏற்கனவே இருசாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்தி திரைத்தொழிலை நடத்துவோம் என்றும், திரைத்துறை வளர்ச்சிக்காகவும் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம்.
திரைத்துறையில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது, திரைத்துறையின் நலன் கருதி, தாயுள்ளத்துடன் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுறுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
