ஆலத்தூர் அடுத்த ஆதனூரில் சிதிலமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்

பெரம்பலூர், டிச.21: ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் சிதிலமடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலத்தூர் தாலுகா, ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டிற்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதோடு, புற நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகையை விட தற்போது அதிகமாக அளவிலான மக்கள் உள்ளனர். தற்பொழுது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் சுமார் 100 க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுப்புற கிராமமான ஆதனூர், மதுரா குடிக்காடு, கொட்டரை, பிலிமிசை, கூத்தூர், குறிஞ்சிப்பாடி, நொச்சிகுளம், இராமலிங்கபுரம், இரசுலாபுரம், மேத்தால், சில்லக்குடி, காரைப்பாடி , ஜமீன்ஆத்தூர், பாலாம்பாடி போன்ற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 2016ஆம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை கம்பிகள் பெயர்ந்து சிமெண்ட் கல் பெயர்ந்து கீழே விழுந்தது. மின்சார இணைப்பு பாதிப்பு அடைந்தது. அப்போது விபத்தை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை கண்ட மருத்துவர் வட்டார மருத்துவரிடம் தகவல் அளித்தார். தகவலை ஏற்றுக்கொண்டு நேரில் பார்வையிட்ட வட்டார மருத்துவர் பெரம்பலூர் மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் உடனடியாக இங்கு செயல்படும் மருத்துவமனையை அதே ஊரில் செயல்படும் துணை சுகாதார நிலையம் (செவிலியர் குடியிருப்பு) கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் அரசு ஆரம்ப சுகாதார செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது இயங்கி வரும் துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் கொரோனோவுக்கான சமூக இடைவெளியை பின்பற்றுவது கேள்விக்குறியாக இருக்கிறது. பொதுமக்கள் முக்கியமாக கர்ப்பிணிகள் இளைப்பாற காற்றோட்டமான இடவசதி இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மருத்தவமனையில் பிரசவம் நடைபெறாமல் உள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் சிதிலமடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி, அதே இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதார துறைக்கும் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>