மழையால் சேதமடைந்ததால் சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையம் தொடக்க பள்ளிக்கு இடமாற்றம்

சீர்காழி, டிச.21: சீர்காழி நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்ததால் தொடக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் 150க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் சிதிலமடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தது.

இதனால் மழைநீர் ஒழுகுவதால் மருந்து மாத்திரைகள் சேதமடைந்தன. மேலும் டாக்டர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது பழுதடைந்த கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட முடியாமல் போனதால் தற்காலிகமாக சீர்காழி ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டது தொடர்பாக பொதுமக்களுக்கு சரிவர தெரியப்படுத்தவில்லை. இதனால் ஈசானிய தெருவில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொடக்கப் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால் பள்ளி திறந்தால் ஆரம்ப சுகாதார நிலையம் எங்கு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>